தோழியின் தாயார் குளிப்பதை படம் பிடித்து மிரட்டிய ஆசாமி கைது
நாகர்கோவிலில் தோழியின் தாயார் குளிப்பதை படம் பிடித்து மிரட்டிய ஆசாமி கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் தோழியின் தாயார் குளிப்பதை படம் பிடித்து மிரட்டிய ஆசாமி கைது செய்யப்பட்டார்.
சைபர் கிரைமில் பெண் புகார்
நாகா்கோவில் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மகள் நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கும், டொிக் சந்திப்பு கிரீன்ஸ் தெருவை சேர்ந்த பார்த்திபன் (வயது 21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக பழகி வந்தனர். இதையடுத்து பார்த்திபன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து சென்றார். இதனால் எங்கள் குடும்பத்தினருக்கும், பார்த்திபனுக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டது.
ஆபாச வீடியோ
இந்த நிலையில் நான் வீட்டில் குளிப்பதை ரகசியமாக செல்போனில் பார்த்திபன் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை காட்டி, என்னிடம் ரூ.50 ஆயிரம் கேட்டார். பணம் கொடுக்கவில்லை என்றால் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி வருகிறார்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
அந்த புகாரின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை நேற்று முன்தினம் இரவு பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
வாலிபர் கைது
அதைத்தொடர்ந்து பார்த்திபனின் செல்போன் மற்றும் லேப்-டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில் புகார் அளித்த பெண்ணின் ஆபாச வீடியோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து பார்த்திபனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
---