குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கால அவகாசம் வழங்க வாய்ப்பில்லை
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற காலஅவகாசம் வழங்க வாய்ப்பில்லை என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
குடியாத்தம்
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற காலஅவகாசம் வழங்க வாய்ப்பில்லை என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகளை அகற்றும் பணிகள் குறித்து குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் ரமேஷ், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் லலிதா, நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யுவராஜ், சாந்தி, மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் நகர்மன்ற உறுப்பினர் தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என குடியாத்தம் நெல்லூர்பேட்டை பாவோடும்தோப்பு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பிறது கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கால அவகாசம் வழங்க வாய்ப்பில்லை
குடியாத்தம் தாலுகாவில் உள்ள நீர்வழி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கோர்ட்டு உத்தரவு தமிழக அரசு உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது. ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக கணக்கிடப்பட்டது. தற்போது 675 வீடுகள் அகக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 600-க்கும் அதிகமான வீடுகள் அகற்றப்பட வேண்டி உள்ளது. குடியாத்தம் நெல்லூர்பேட்டை பாவோடும்தோப்பு பகுதியில் உள்ளவர்கள் வீடுகளை இடிக்க கால அவகாசம் கேட்டுள்ளனர். கால அவகாசம் அளிப்பதற்கு வாய்ப்பு இல்லை.
கோர்ட்டு அறிவுறுத்தல் படியே இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றது. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். கால அவகாசம் வழங்கப்படாது. மேலும் அப்பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின் இணைப்புகளை துண்டிக்குமாறு மின் வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வீட்டுமனை வழங்க நடவடிக்கை
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக வீட்டுமனை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான இடங்கள் தேர்ரு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் வீட்டு மனைகளில் குடியிருப்புகள் கட்டித்தர அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.