பெரியார் நினைவு சமத்துவபுரம் 5-ந்தேதி திறப்பு
மரக்காணம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5-ந்தேதி வருகிறார். இதையொட்டி அங்கு அரசு முதன்மை செயலாளர் அமுதா நேற்று ஆய்வு செய்தார்.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பெரிய கொழுவாரி ஊராட்சியில், ஊரக வளர்ச்சி துறை சார்பில் புதிதாக பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது. இங்கு கழிவறை, மழைநீர் சேகரிப்பு, குடிநீர் குழாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் விழா வருகிற 5-ந் தேதி நடைபெற உள்ளது.
பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்து வீடுகளை பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும் ஊரக வளர்ச்சி துறை, மகளிர் திட்டம் மற்றும் பல்வேறு துறைகள் மூலம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார்.
அரசு செயலாளர் ஆய்வு
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவருடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் பிரவீன் நாயர், மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதன்பின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா கூறுகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5-ந் தேதி கொழுவாரி ஊராட்சிக்கு வந்து புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார். இந்த பகுதியில் சாலை, குடிநீர், மின்விளக்கு வசதி, குழந்தைகளுக்கான விளையாட்டு திடல், பொது வினியோக கடை, மரக்கன்றுகள் வளர்த்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அனைத்து உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
ஆலோசனை
தொடர்ந்து திண்டிவனம் நெடுஞ்சாலைத்துறை விருந்தினர் மாளிகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் சங்கர், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் காஞ்சனா, மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.