வாணியாறு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

வாணியாறு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-03-23 17:53 GMT
தர்மபுரி:
வாணியாறு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்
தர்மபுரி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மன்றத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சரஸ்வதி முருகசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலாளர் மாரிமுத்து ராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 
அப்போது அவர்கள் பேசுகையில், கோடை காலம் நெருங்கி வருவதால் தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கே.ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து நீரேற்று திட்டத்தின் மூலம் பொதியன் பள்ளம் அணைக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும். வாணியாறு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விட வேண்டும். தொப்பூர் கணவாயில் அவசர மருத்துவ சிகிச்சை மையம் அமைக்க வேண்டும். பாளையம்புதூரில் புறநகர் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி-அரூர் மெயின் ரோட்டில் உள்ள கசியம்பட்டி கிராமத்துக்கு புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
நடவடிக்கை
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன் பதிலளித்து பேசுகையில், குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையாக விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு மாவட்ட ஊராட்சி மூலம் கடிதம் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்