ஊத்தங்கரை அருகே நாட்டு துப்பாக்கியுடன் 2 பேர் கைது
ஊத்தங்கரை அருகே நாட்டு துப்பாக்கியுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் குட்டியப்பன் மற்றும் போலீசார் ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீர்த்தம்- புங்கனை ரோட்டில் புதுப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 4 பேர் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனடியாக போலீசார் 2 பேரையும் விரட்டி பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்கள் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாம்பட்டி வேலனேரியை சேர்ந்த தர்மலிங்கம் (வயது 37) மற்றும் மோகன் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் தப்பியோடிய எடப்பாடி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த செல்வகுமார் மற்றும் ஜெகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.