வாகனம் மோதி முதியவர் பலி
உப்பிடமங்கலம் அருகே வாகனம் மோதி முதியவர் பலியானார்
வெள்ளியணை,
முதியவர் பலி
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே உள்ள பொரணி கும்மாயம்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 70). இவர் உப்பிடமங்கலம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வேலைக்கு செல்வதற்காக கும்மாயம்பட்டி வீட்டிலிருந்து தனது சைக்கிளில் உப்பிடமங்கலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து படுகாயமடைந்த பழனியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பழனியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோகைமலை
திருச்சி மாவட்டம் வடக்கு தாரநல்லூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (42). இவர் தனது குழந்தைகளான லக்திகா, சாய்சரண் ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு கொண்டு, தோகைமலையில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். திருச்சி-தோகைமலை மெயின் ரோட்டில் பெரியகளத்துப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது காவல்காரன்பட்டியை சேர்ந்த ரகுல் (20) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக பாலசுப்பிரமணியன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாலசுப்பிரமணியன், லக்திகா, சாய்சரண் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பாலசுப்பிரமணியன் மனைவி ராணி கொடுத்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.