மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான தேர்வு
விளையாட்டு விடுதியில் சேர மாவட்ட அளவில் மாணவ-மாணவிகள் தேர்வு நடந்தது.
தேனி:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிடம், உணவு வசதிகளுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில் 330 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். தடகளம், ஆக்கி, கபடி, கைப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், இறகுப்பந்து, குத்துச்சண்டை, டென்னிஸ், நீச்சல் போன்ற போட்டிகளுக்கான தேர்வு நடந்தது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் இந்த தேர்வில் பங்கேற்றனர். மேலும் சில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்காமல் தேர்வுக்கு வந்தனர். அவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு தேர்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த தேர்வை மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் மொத்தம் 270 பேர் மாநில அளவிலான தேர்வு போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். மாநில அளவிலான போட்டிகள் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தொடங்கி 8-ந்தேதி வரை நடக்கிறது.
மாநில போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகள் கலந்தாய்வு மூலம் தங்களுக்கு விருப்பமான மாவட்டங்களில் உள்ள விளையாட்டு விடுதிகளை தேர்வு செய்ய உள்ளனர். மாநில போட்டிக்கு பங்கேற்க செல்லும் போது விளையாட்டு சீருடைகள், உபகரணங்களை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.