ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்

பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் புகை பிடிக்கக்கூடாது, ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2022-03-23 17:03 GMT
தேனி: 

சுற்றறிக்கை
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு மாணவர் கத்தியுடன் பள்ளிக்கு வந்து தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல், தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புத்தகம் எடுத்து வராததை கண்டித்த ஆசிரியரை மாணவர் கன்னத்தில் அறைந்த சம்பவமும், ஜி.கல்லுப்பட்டியில் ஆசிரியைகளை மாணவர்கள் சிலர் கேலி செய்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்களால் தங்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
பள்ளி வளாகங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிடத்தில் போதிய தண்ணீர் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறை அமைதியான சூழலில் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் அனைத்து நாட்களிலும் சீருடை அணிந்து தான் பள்ளிக்கு வர வேண்டும். மாணவர்களின் சீருடை, சிகை அலங்காரம் போன்றவை தொடர்பாக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.

ஜீன்ஸ் தடை
பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது. ஆசிரியர்கள் கழுத்தில் செயின் அணிந்து இருந்தால் அது வெளியே தெரியாத வகையில் சட்டை பட்டன் போட்டு இருக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் புகை பிடிக்கக்கூடாது. வேறு நபர்கள் புகை பிடிக்கவும் அனுமதிக்கக்கூடாது. மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். இதற்காக உதவி தலைமை ஆசிரியர் நிலையில் கண்காணிப்பு அலுவலர் நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஆலோசனை கூட்டம் தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடக்கிறது. இதில், மேலும் பல அறிவுரைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்