தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
திருச்சி சுப்ரமணியபுரம் ஜெயிலனியா 6-வது குறுக்கு தெரு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் அடைப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சுப்ரமணியபுரம், திருச்சி.
உடைந்த நாற்காலிகள்
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பஸ் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ள நாற்காலிகள் உடைந்து காணப்படுவதால் பயணிகள் அமர முடியாமல் பஸ்கள் வரும் வரை கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாக இதே நிலை நீடிப்பதினால் முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கரும்பாசலம், பெட்டவாய்த்தலை, திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையம் முன்பு உள்ள சாலையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் தவறி விழுந்து படுகாயம் அடைகின்றனர். மேலும், அந்த சாலையின் குறிப்பிட்ட இடத்தில் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவேக், திருச்சி.
பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீர்
திருச்சி பீமன்நகர் மார்சிங்பேட்டையில் உள்ள துர்கை அம்மன் கோவில் வலது புறம் பாதாள சாக்கடை உள்ளது. இதில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை அப்புறப்படுத்த அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருச்சி.
ஊரணியை தூர்வார வேண்டும்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் எதிரே உள்ள சுக்கா ஊரணியில் ஏராளமான கருவேல மரங்கள் முளைத்து காடு போல் காட்சியளிக்கிறது. இதனால் மழை பெய்யும் போது இந்த ஊரணியில் மழைநீர் தேங்க வழியின்றி உள்ளதால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வருங்காலத்தில் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஊரணியில் முளைத்துள்ள கருவேல மரங்களை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சிராஜீதீன், திருச்சி.
அறிவியல் பூங்காவின் அவலநிலை
திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் அறிவியல் பூங்கா உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து பொழுதை களித்து வருகின்றனர். தற்போது இந்த பூங்காவில் உள்ள ஆண் மற்றும் பெண் கழிவறைகளில் குழாய்கள் உடைந்தும், கழிவுநீர் தேங்கியும் நிற்கிறது. மேலும் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு சாதனங்கள் உடைந்து கிடக்கின்றது. மேலும் பூங்காவை சரியாக பராமரிப்பதும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பூங்காவை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருச்சி.