கோத்தகிரி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்
கோத்தகிரி அருகே நீரோடையை ஆக்கிரமித்து சாகுபடி செய்து இருந்த பயிர்களை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே நீரோடையை ஆக்கிரமித்து சாகுபடி செய்து இருந்த பயிர்களை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
கோத்தகிரி, நெடுகுளா அருகே உள்ள காவிலோரை கிராமப்பகுதியில் நீரோடை செல்கிறது. இந்த நீரோடையை ஒட்டி ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் மலை காய்கறிகளை சாகுபடி செய்து உள்ளனர்.
இந்த நிலையில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கோத்தகிரி தாசில்தார் காயத்ரி தலைமையில் வருவாய் ஆய்வாளர் சகுந்தலை, கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் காவிலோரை கிராமத்திற்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் அங்குள்ள நீரோடையை ஆய்வு செய்து நிலஅளவை செய்தனர்.
விவசாயிகள் வாக்குவாதம்
அப்போது அந்த ஓடையை ஆக்கிரமித்து கேரட், முட்டைகோஸ் மற்றும் புரூக்கோலி உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு சாகுபடி செய்து இருந்த கேரட், முட்டை கோஸ் மற்றும் புரூக்கோலி உள்ளிட்ட பயிர்களை அகற்ற தொடங்கினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த விவசாயிகள் பலர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு பயிர்களை அகற்றிக்கொண்டு இருந்த அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆக்கிரமிப்பு இருந்தாலும் அவற்றை திடீரென்று அகற்ற சொன்னால் எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்கள்.
அதிகாரிகள் அறிவுரை
அத்துடன் வங்கியில் கடன் வாங்கி பயிர்களை சாகுபடி செய்து இருப்பதால் அறுவடை வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற காலஅவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இல்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் விவசாயிகள் அறிவித்தனர்.
இதையடுத்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதால் ஆக்கிரமிப்பு நிலத்தில் சாகுபடி செய்து உள்ள பயிர்களை அகற்ற மாட்டோம் என்றும், நிலஅளவை செய்தபின்னர் அங்கு கற்கள் பதிக்கப்படும் எனவும், எதிர்காலத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து சாகுபடி செய்யக்கூடாது என்று விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.