தியேட்டர்களில், ஜேம்ஸ் திரைப்படம் நிறுத்தம்; எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. கண்டனம்
வேற்று மொழி படங்களை திரையிட வேண்டி தியேட்டர்களில், ஜேம்ஸ் திரைப்படம் நிறுத்தபட்டதற்கு எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. கண்டனம் தெரிவித்துள்ளார்
பெங்களூரு:
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த புனித்ராஜ்குமார் கடந்த ஆண்டு(2021) அக்டோபர் 29-ந்தேதி திடீரென்று மாரடைப்பால் மறைந்தார். அவர் இறுதியாக நடித்த ஜேம்ஸ் திரைப்படம் கடந்த
17-ந்தேதி கர்நாடகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்த நிலையில் பிற மொழி படங்களை திரையிட சில தியேட்டர்களில் ஜேம்ஸ் படத்தை நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பா.ஜனதா மூத்த தலைவரும், எம்.எல்.சி.யுமான எச்.விஸ்வநாத் கூறுகையில், ‘மறைந்த நடிகர் ராஜ்குமார் குடும்பம் கர்நாடகத்தின் கலாசார தூதர்கள். அவர்கள் கர்நாடக மக்களுடன் பின்னி பிணைந்து உள்ளனர். அவர்களுக்கு நாம் மரியாதை, கவுரவம் கொடுக்க வேண்டும். மறைந்த நடிகர் புனித்ராஜ்குமாரின் இறுதிப்படமான ஜேம்ஸ் வெளியாகி ஒரு வாரம் தான் ஆகிறது.
அதற்குள் சில தியேட்டர்களில் வேற்று மொழி படங்களை திரையிட ஜேம்ஸ் படத்தை தூக்கியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. நாம் அனைவரும் முதலில் நமது மொழி படத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காஷ்மீர் பைல்ஸ் படம் ரத்தம் சரித்திர திரைக்காவியம். யார் விரும்புகிறார்களே அவர்கள் காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்க்கலாம்’ என்றார்.