தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-03-23 14:50 GMT
குண்டும், குழியுமான சாலை

பாளையங்கோட்டை மகாராஜநகர் ரவுண்டானாவில் இருந்து ஜெயந்திநகர், முனிசிபல் காலனி செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகிறாா்கள். மேலும் அந்த பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்கா முற்றிலும் பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. எனவே. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
அருண் விக்னேஷ், பாளையங்கோட்ைட.

பயணிகள் குழப்பம்

அம்பையில் இருந்து பிரம்மதேசம், மன்னார்கோவில், கடையம் வழியாக சம்பன்குளத்திற்கு இயங்கி வரும் அரசு பஸ்சின் முன்பகுதியில் உள்ள பெயர் பலகையில் வழித்தடம் எண் 22 எப் என்றும், பின்பகுதியில் உள்ள பெயர் பலகையில் வழித்தடம் எண் 20ஏ என்றும் உள்ளது. இதனால் பயணிகள் குழப்பம் அடைகிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
திருக்குமரன், கடையம்.

கேட்பாரற்று கிடக்கும் குப்பை தொட்டிகள் 

கடையம் பெரும்பத்து ஊராட்சி வெய்க்காலிப்பட்டி இந்திரா புதுக்காலனிக்கு செல்லும் சாலையில் ரேஷன் கடைக்கு எதிரே கேட்பாரற்று குப்பை தொட்டிகள் கிடக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குப்பைகளை சாலையோரங்களில் வீசிச் செல்கிறார்கள். ஆகவே இந்த குப்பை தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைத்தால் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 
சேகர், வெய்க்காலிப்பட்டி.

வேகத்தடை அமைக்க வேண்டும்

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா ஊத்துமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதி சாலையில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்கிறார்கள். இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே, நோயாளிகள் நலன் கருதி அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஞானமுத்து, ஊத்துமலை.

பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடம் 

ஆய்க்குடி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிச்சுமணி, ஆய்க்குடி.

நாய்கள் தொல்லை

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதனால் ஆற்றில் குளிக்க செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் அங்குள்ள கடைகள், பஸ் நிறுத்தம் அருகிலும் நாய்கள் தொல்லை உள்ளது. அந்த வழியாக செல்லும் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கும் அவலநிலை உள்ளது. எனவே, தெரு நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ராமசாமி, ஆத்தூர்.

மின்விளக்குகள் அமைக்க வேண்டும்

தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருச்செந்தூர் ரோடு ரவுண்டானா பைபாஸ் பாலத்தில் இருபுறமும் சாலையோரத்தில் மணல் குவிந்து கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகிறாா்கள். இதனால் இந்த பகுதியில் சாலையில் குவிந்து கிடக்கும் மணலை அகற்ற வேண்டும். மேலும் தெர்மல்நகர் ரவுண்டானா பாலம் முதல் நெல்லை பைபாஸ் பாலம் வரை சாலையின் இருபுறமும் மின்விளக்குகள் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். மேலும் ஒருசில அசம்பாவித சம்பவங்கள் நடக்கிறது. எனவே, இவற்றை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சண்முகசுந்தரம், தூத்துக்குடி.

சுகாதார கேடு 

திருச்செந்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆவுடையார்குளம் வடிநீர் கால்வாய் செல்கிறது. இதில் கால்வாயில் கழிவுநீர் கலக்கிறது. இந்த வடிநீர் கால்வாய் அருகில் நகராட்சி அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளதால் சுகாதார கேடு ஏற்படுவதுடன் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே, வடிநீர் கால்வாயில், கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
மோகனசுந்தரம், திருச்செந்தூர்.

--------------

மேலும் செய்திகள்