கோவில்பட்டியில் 12 கிராமமக்கள் புதன்கிழமை சாலை மறியல்; 57 பேர் கைது

கோவில்பட்டியில் இளையரசனேந்தல் உள்ளிட்ட 12 ஊராட்சிகளை கோவில்பட்டி யூனியனில் இணைக்க வலியுறுத்தி புதன்கிழமை 12 கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-03-23 14:34 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் இளையரசனேந்தல் உள்ளிட்ட 12 ஊராட்சிகளை கோவில்பட்டி யூனியனில் இணைக்க வலியுறுத்தி நேற்று 12 கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 57 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிராம மக்கள் சாலைமறியல்
கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு நேற்று  தேசிய விவசாயிகள் சங்கம், இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு சார்பில் 12 கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளையரசனேந்தல் பிர்காவுக்கு உட்பட்ட இளையரச னேந்தல், வெங்கடா சலபுரம், அய்யநேரி, அப்பநேரி, புளியங்குளம், சித்திரம்பட்டி, வடக்குப்பட்டி, பிச்சை தலைவன்பட்டி, பிள்ளையார் நத்தம், ஜமீன் தேவர் குளம், நக்கல முத்தன்பட்டி, முக்கூட்டு மலை ஆகிய 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்திலேயே தொடர வலியுறுத்தியும், 12 ஊராட்சிகளை கோவில்பட்டி யூனியனில் இணைக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது.
போக்குவரத்து பாதிப்பு
மறியல் போராட்டத்துக்கு தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார். இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் இளையரசனேந்தல் குறுவட்ட உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கோபால கிருஷ்ணன், துணை ஒருங்கிணைப்பாளர் கற்பூரராஜ், தேசிய விவசாயிகள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராகுல், குருவிகுளம் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசு தேவன், பாஜக மாநில ஊடக பொறுப்பாளர் தினேஷ் ரோடி, வடக்கு மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
57 பேர் கைது
இதை தொடர்ந்து கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சபாபதி, சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 57 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்