கோயம்பேட்டில் கார் மீது லாரி மோதி விபத்து: ஐ.ஏ.எஸ்.அதிகாரி உயிர் தப்பினார்

கோயம்பேட்டில் கார் மீது லாரி மோதிய விபத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி அதிர்ஷ்டவசமாக எந்த காயமுமின்றி உயிர் தப்பினார்.

Update: 2022-03-23 08:53 GMT
பூந்தமல்லி,  

கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால். ஐ.ஏ.எஸ்.அதிகாரியான இவர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல பொருளாதார மேம்பாட்டு கழகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையே இவர் நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு 100 அடி சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரை புரசைவாக்கம் பெருமாள்பேட்டை நாயக்கன் தெருவை சேர்ந்த பன்னீர் செல்வம் (60) என்பவர் ஓட்டி சென்றார்.

இந்த நிலையில், கோயம்பேடு 100 அடி சாலை சந்திப்பில் கார் சென்றபோது, அந்த வழியாக சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி ஒன்று நந்தகோபால் சென்ற கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி மற்றும் கண்ணாடி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் அதிகாரி நந்தகோபால் அதிர்ஷ்டவசமாக எந்த காயமுமின்றி உயிர் தப்பினார். இது தொடர்பாக கார் ஓட்டுனர் பன்னீர் செல்வம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் விமல்சந்திரன் (25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்