நிலத்தை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

நிலத்தை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-22 23:24 GMT
சேலம்:
நிலத்தை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காய்கறிகள் விற்பனை
ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி சுமதி (வயது 40). தள்ளுவண்டியில் வைத்து வீடு, வீடாக காய்கறிகள் விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று தனது கணவர், தாய் மற்றும் 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
பின்னர் தீடீரென்று மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை அப்புறப்படுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
போலி ஆவணம்
இது குறித்து சுமதி கூறும்போது, எங்களுக்கு சொந்தமான 53 சென்ட் விவசாய நிலம் எனது தாய் உள்பட 4 பேருக்கு பாத்தியப்பட்டது. ஆனால் எங்கள் உறவினர் போலி ஆவணம் மூலம் பட்டா தயாரித்து, முழு நிலத்தையும் அவர் பெயருக்கு கிரையம் செய்து கொண்டார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், காடையாம்பட்டி போலீசார் ஆகியோரிடம் பல முறை கோரிக்கை மனு அளித்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை. எனவே போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக்கோரி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன் என்றார். இதையடுத்து போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை குறித்து மீண்டும் காடையாம்பட்டி போலீசில் புகார் கொடுக்கும் படி கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்