உப்பினங்கடியில், ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றி ஹிஜாப்பை கழற்றிவிட்டு வகுப்பறைக்கு சென்ற மாணவிகள்
உப்பினங்கடியில், ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றி ஹிஜாப்பை கழற்றிவிட்டு மாணவிகள் வகுப்பறைக்கு சென்றனர்
மங்களூரு: கர்நாடகத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில், மாநில அரசு மத அடையாள ஆடைகளை அணியக்கூடாது என்று உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஐகோர்ட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு இறுதி தீர்ப்பு வழங்கியது. இதில், மாநில அரசின் உத்தரவு செல்லும் என்றும், மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்லாமல் புறக்கணித்து வருகிறார்கள். பெரும்பாலான பகுதியில், மாணவிகள் ஹிஜாப்பை கழற்றிவிட்டு சென்று வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று தட்சிண கன்னடா மாவட்டம் உப்பினங்கடி பகுதியில் உள்ள கல்லூரிக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய கல்லூரி முதல்வர், ஐகோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி ஹிஜாப்பை கழற்றிவிட்டு வகுப்பறைக்கு செல்லும்படி கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட மாணவிகள், தனி அறைக்கு சென்று ஹிஜாப்பை அகற்றிவிட்டு வகுப்பறைக்கு சென்றனர்.