கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெங்களூருவில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவாக பெங்களூருவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைக்கிறது அதாவது 34.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது இதற்கு நகர்மயமாக்குதல் காரணம் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்

Update: 2022-03-22 20:55 GMT
பெங்களூரு: கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவாக பெங்களூருவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைக்கிறது.  அதாவது 34.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இதற்கு நகர்மயமாக்குதல் காரணம் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர். 

பூங்கா நகரம்

கர்நாடக தலைநகர் பெங்களூரு பூங்கா நகரம், சிலிக்கான் பள்ளத்தாக்கு போன்ற பல புனை பெயர்களால் அழைக்கப்படுகிறது. நகரில் கப்பன் பூங்கா, லால்பாக் போன்ற எழில் கொஞ்சும் இயற்கை பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஓயாது வேலை செய்யும் நகர வாசிகள் தங்கள் விடுமுறை நாட்களை கழிப்பதில் இந்த பூங்காக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

நாட்டின் முக்கிய நகரங்களின் பட்டியலில் பெங்களூருவும் ஒன்று. பெங்களூருவில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எலக்ட்ரானிக் சிட்டி என்ற பெயரை கொண்ட பெங்களூருவிற்கு பிற மாநில மக்கள் வேலைவாய்ப்புகள் தேடி வருகின்றனர். அவ்வாறு வரும் மக்கள் பெங்களூருவின் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தங்களை தக்க வைத்து கொள்கின்றனர். குளிர்ச்சி நிறைந்த சூழலாக பெங்களூரு  நகர் அமைந்துள்ளது. நகரின் பல பகுதியில் இயற்கை பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

வெயில் தாக்கம் அதிகரிப்பு

சாலையோர மரங்கள், தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் தண்ணீர் போன்றவை பெங்களூருவை மக்கள் வசிப்பதற்கு உகந்த நகரம் பட்டியலில் இடம்பெற செய்துள்ளது. டெல்லி, சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் மக்கள் அடர்த்தி அதிகமாக இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை அங்கு நிலையாக இல்லை. காலத்திற்கேற்ப தட்பவெப்பம் மாறிக்கொண்டே இருக்கிறது. இதனால் அதுபோன்ற பெருநகரங்கள் அதிகவெப்பம், கடும் குளிர் போன்ற மாறுபட்ட காலநிலையை கொண்டுள்ளன. 

ஆனால் கடந்த சில மாதங்களாக பெங்களூருவில் பருவநிலை மாறுபட்டு வருகிறது. நடப்பு மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புள்ளிவிவர படி, பெங்களூருவில் நடப்பு மாதத்தில் (மார்ச்) 34.5 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி உள்ளது. 

அதாவது பெங்களூரு நகரில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் பதிவாகி உள்ளது. மக்கள் வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வீடுகளுக்குள்ளேயே முடங்கி விடுகின்றனர். மேலும், உடல் சூட்டை குறைக்க இளநீர், குளிர்ந்த நீர், தர்ப்பூசணி, மோர் போன்ற குளிர்ச்சி நிறைந்த நீர் ஆகாரங்களை அதிகம் பருகுகின்றனர். 

மேம்பால பணிகள்

பெங்களூருவில் போக்குவரத்து மேம்பாட்டிற்காக மரங்கள் அழிக்கப்பட்டு மெட்ரோ ரெயில் பாதைகளும், மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதற்காக பல ஏக்கர் அளவிற்கு மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் நகர் வெப்பமடைந்து வருகிறது. மரங்கள் வெட்டப்படுவதால் காலநிலையில் மாற்றம் ஏற்படவாய்ப்பு உள்ளது. அதிக வெப்பம் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதி அடையும் நிலை வரலாம் என கருதப்படுகிறது. மேலும், மக்கள் தொகை அதிகமாவதால் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையும் கடந்த சில 
ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 

பெங்களூரு நகரில் மட்டும் சுமார் 1 லட்சம் தனியார் வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாக புள்ளிவிவரம் கூறுகிறது. இதனால் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அரசு இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான பசுமை சார்ந்த வாகனங்களுக்கு முக்கியதுவம் அளிக்கிறது. அந்த வகையில் மின்சார பயன்பாட்டு வாகனங்களை மக்கள் பயன்படுத்த அரசு ஊக்குவிக்கிறது. 

மின்சார வாகனங்கள்

இனிவரும் காலங்களில் எரிபொருளை சார்ந்து இருக்கும் வாகனங்களை புறக்கணித்துவிட்டு இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான மின்சார வாகனங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும். இதற்காக அரசு நகரின் பல்வேறு இடங்களில் மின்சார சார்ஜிங் நிலையங்கள் அமைத்து வருகிறது. 

இனிவரும் காலங்களில் இயற்கையை அழிக்காமல் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் மக்கள் அடுத்த தலைமுறைக்கு உலகை எடுத்து செல்ல முடியும் இல்லாவிட்டால் புவி வெப்பம் அடைந்து மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும் செய்திகள்