கதண்டுகள் கடித்து தாய்-மகள் உள்பட 7 பேர் காயம்
கதண்டுகள் கடித்து தாய்-மகள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கூவத்தூர் மடத்துத் தெருவில் பொக்லைன் எந்திரம் மூலம் தைல மரங்கள் உள்ளிட்ட சில மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தும் பணி நடந்தது. அங்கு இடையூறாக இருந்த ஒரு கருவேல மரத்தை அப்புறப்படுத்தியபோது அதில் இருந்த கதண்டுகள் கலைந்து அங்கு மரம் வெட்டிக்கொண்டிருந்த அதே தெருவை சேர்ந்த பாலு, விழப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், டி.மங்கலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், முருகேசன், ரவிச்சந்திரன் மற்றும் அப்பகுதியில் 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்த அமலோற்பவமேரி(வயது 70) மற்றும் அவரது மகள் அடைக்கலமேரி(54) ஆகியோரை கதண்டுகள் துரத்தி, துரத்தி கடித்தன. இதில் காயமடைந்த 7 பேரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அமலோற்பவமேரி மற்றும் அவரது மகள் அடைக்கலமேரி ஆகியோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 5 பேரும் முதல் உதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.