திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழாவில் கிரிவலப்பாதையில் தேரோட்டம்

திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழாவையொட்டி 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது

Update: 2022-03-22 20:17 GMT
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழாவையொட்டி 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது
தேரோட்டம்
முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோவிலில் கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம், நேற்று திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் முருகப்பெருமான், தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. 
இதனையடுத்து உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமான் தெய்வானையுடன் புறப்பட்டு காவல் தெய்வமான கருப்பணசுவாமி சன்னதிக்கு வந்து அனுமதி பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.  முருகப்பெருமான்-தெய்வானை தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 
4 மணிநேரம் வலம்
திரளாக கூடிய பக்தர்கள் வெற்றிவேல் கந்தனுக்கு அரோகரா, வேல், வேல்... முருகனுக்கு அரோகரா என்று உரத்த குரலில் பக்தி கோஷங்கள் எழுப்பி தேரின் வடத்தினை பிடித்து இழுத்தனர். காலை 6.27 மணிக்கு நிலையில் இருந்து தேர் புறப்பட்டது. இதையடுத்து விநாயகர் எழுந்தருளிய சிறிய தேரும் புறப்பட்டது. 
பெரிய தேரும், சிறியதேரும் ஒன்றின் பின் ஒன்றாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில், 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட மலையை கிரிவலப்பாதையில் வலம் வந்தது. சுமார் 4 மணி நேரம் வலம் வந்து 10.27 மணிக்கு தேர் நிலைக்கு வந்தடைந்தது. விழாவில் இன்று(புதன்கிழமை) தீர்த்த உற்சவம் நடக்கிறது.

மேலும் செய்திகள்