தெரு நாய்கள் கடித்து குதறியதில் 5 ஆடுகள் செத்தன
தெரு நாய்கள் கடித்து குதறியதில் 5 ஆடுகள் செத்துப் போயின
வெள்ளியணை
வெள்ளியணை அருகே உள்ள பாகநத்தம் ஊராட்சி நொச்சிபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. விவசாயி. இவர், விவசாயத்துடன் 30-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளையும் வளர்த்து வருகிறார். வழக்கம்போல நேற்று மதியம் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அங்கு சுற்றித்திரிந்த 3-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் மேய்ந்து கொண்டிருந்த செம்மறி ஆடுகளை துரத்தித் துரத்தி கடித்து குதறின. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் நாய்களை துரத்தி விட்டு சென்று பார்த்தபோது 5 ஆடுகள் செத்துக் கிடந்தன. மேலும் சில ஆடுகள் காயமடைந்து இருந்தன. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், பாகநத்தம் ஊராட்சி பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள் ஆகியவற்றை கடித்து குதறுவதால் அவை செத்து விடுகின்றன. இதனால், ஆடு மற்றும் கோழிகளை வளர்ப்போருக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்தவும், கால்நடைகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.