வேம்பங்குடி மேற்கு, பெரியாளூர் ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
வேம்பங்குடி மேற்கு, பெரியாளூர் ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கீரமங்கலம்:
கீரமங்கலம் அருகில் உள்ள வேம்பங்குடி மேற்கு மற்றும் பெரியாளூர் ஊராட்சிகளில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் முழுமையாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதால் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் சிங்காரவேலு தலைமை தாங்கினார். ஊராட்சிமன்ற தலைவர் ஜெயலெட்சுமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் அய்யாச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சியில் உள்ள 300 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு முழுமையாக குடிதண்ணீர் வழங்குவதாக ஊராட்சி நிர்வாகத்திலிருந்து கூறப்பட்டது. பொதுமக்கள் சிலர் இணைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறையாக கிடைப்பதாக கூறினார்கள். அப்போது ஊராட்சி தரப்பிலிருந்து பதில் கூறும் போது, பலர் குடிநீர் குழாய்களில் இருந்து மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுவதால் மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். அதனால் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவதை தவிர்க்க வேண்டும் என்றனர். இதில் சண்முகநாதன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அரங்குளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் முருகானந்தம் நன்றி கூறினார்.