காட்டு கருவேலமரங்களை அழித்து எள் சாகுபடி
ஆலங்குளம் கிராமத்தில் காட்டுகருவேல மரங்களை அழித்து தரிசு நிலத்தில் எள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. அதை கலெக்டர் சங்கர்லால் குமாவத் நேரில் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்,
ஆலங்குளம் கிராமத்தில் காட்டுகருவேல மரங்களை அழித்து தரிசு நிலத்தில் எள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. அதை கலெக்டர் சங்கர்லால் குமாவத் நேரில் ஆய்வு செய்தார்.
பயிர் சாகுபடி
திருப்புல்லாணி வட்டாரம் ஆலங்குளம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் தரிசு நிலங்களில் உள்ள காட்டுகருவேல மரங்கள் மற்றும் புதர்களை அகற்றிவிட்டு மீண்டும் பயிர் சாகுபடி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் நேரில் ஆய்வு செய்தார். கலெக்டரை ஊராட்சி தலைவர் செல்வம், வேளாண்மைத்துறை அலுவலர்கள் வரவேற்றனர்.
தரிசு நிலங்களில் உள்ள முட்புதர்களை அகற்றி விட்டு மீண்டும் எள் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்தினை கலெக்டர் பார்வையிட்டார். இந்த திட்டத்தில் ஒரு எக்டேருக்கு முட்புதர்களை அகற்றி உழவு செய்து நிலத்தை சமன்படுத்த ரூ.12 ஆயிரம் மற்றும் இடுபொருள் மானியமாக ரூ.1400 வழங்கப்படுகிறது என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
கலெக்டர் ஆய்வு
வேளாண்மைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் திருஉத்தரகோசமங்கை விதை சுத்திகரிப்பு நிலையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்க திட்டத்தில் சிவப்பு கடல்பாசி மற்றும் இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.
வேளாண்மை இணை இயக்குனர் டாம் சைலஸ், துணை இயக்குனர்கள் பாஸ்கரமணியன், தனுஷ்கோடி, உதவி இயக்குனர் அமர்லால், வேளாண் அலுவலர் ஆஷிகா, துணை அலுவலர் சையத் முகமது, உதவி அலுவலர்கள் பழனிமுருகன், முருகேசன், வாசமலர் ஆகியோர் உடன் இருந்தனர்.