மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி
வாணியம்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்கல் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் காமேஷ் (வயது 23), திருப்பூர் பகுதியில் உள்ள ஒரு எலெக்ட்ரிக் கடையில் வேலைபார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இவர் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் தனது நண்பர் ஒருவரை வாணியம்பாடியில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
வெள்ளக்குட்டை அருகே உள்ள பூங்கா மரம் பகுதியில் வரும்போது எதிரில் வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் நோக்கிச் சென்ற தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த காமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் தொடர்பாக ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.