சிலையை படம் பிடிக்க முயன்றவரின் செல்போனை பிடுங்கி உண்டியலில் போட்ட ஊழியர்
ராமேசுவரம் கோவிலில் சிலையை படம் பிடிக்க முயன்றவரின் செல்போனை பிடுங்கி ஊழியர் உண்டியலில் போட்டார்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று மத்திய பிரதேச மாநிலம் உஜ்ைஜனி பகுதியிலிருந்து லலித்குமார் என்ற பக்தர் வந்துள்ளார். அவர் கோவிலின் சாமி சன்னதி அருகே தரிசனம் செய்தபோது சிலையை செல்போனில் படம் எடுக்க முயன்றாக கூறப்படுகிறது. அங்கு பணியில் இருந்த கோவில் பணியாளர் ஒருவர், அவரது செல்போனை பிடுங்கி உண்டியலில் போட்டதாகவும் கூறப்படுகிறது. கோவில் பணியாளருக்கும், லலித்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோவில் அதிகாரிகள் வந்து, நாளை (அதாவது இன்று) உண்டியல் திறக்கப்படுவதாகவும் அப்போது செல்போன் எடுத்து தரப்படும் என்று தெரிவித்துள்ளனர். ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவிலின் வாசல் பகுதியில் போலீசாரின் சோதனையை மீறி வடமாநில பக்தர் ஒருவர் செல்போன் கொண்டு வந்து சிலையை படம் பிடிக்க முயன்றது நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.