தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி. பொதுமக்கள் குறைகள் பகுதி
சாலையோரம் குவிந்த குப்பைகள் அகற்றப்படுமா?
சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாணாவரம் கூட்டு சாலை பகுதியில் சோளிங்கர் கோட்ட மின்பகிர்மான அலுவலகம் உள்ளது, இந்த அலுவலகம் அருகில் உள்ள சாலை ஓரங்களில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த குப்பைகளை அகற்றவும் அப்பகுதில் முறையாக குப்பைகளை கொட்ட குப்பை தொட்டிகளை அமைக்க வேண்டும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர். எனவே குப்பை தொட்டிகள் வைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மூர்த்தி, பாண்டியநல்லூர்.
பஸ் நிலையத்துக்குள் இடையூறு
வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்படுத்தப்படுவதால் பெரும்பாலான பஸ்கள பழைய பஸ் நிலையத்திலிருந்தே புறப்படுகிறது. நெருக்கடியை தவிர்க்க ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை தாராளமாக வந்து பஸ்கள் நிற்கும் இடங்களிலேயே நின்று பயணிகளை ஏற்றுவதால் இடையூறாக உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களும் அதிக வேகத்தில் வருவதால் பயணிகள் மீது மோதிவிடுமோ என்ற அச்சம் உள்ளது. போலீசார் தலையிட்டு இதனை சரி செய்ய வேண்டும்.
-ராஜா, வேலூர்.
தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறக்க வேண்டும்
சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட பஸ் நிலையத்தை மையப்படுத்தி திருத்தணி, பள்ளிப்பட்டு, சித்தூர், வள்ளிமலை, ஆற்காடு, ராணிப்பேட்டை, வேலூர், வாலாஜா ஆகிய பகுதிகளுக்கு ஏராளமான பயணிகள் பயணம் செய்கின்றனர். சோளிங்கர் பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை கட்டப்பட்டது.திடீரென மூடப்பட்ட அந்த அறை திறக்கப்படாமலேயே உள்ளதால் தாய்மார்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறக்க வேண்டும்.
-ராமச்சந்திரன், சோளிங்கர்.
முடங்கிய சாலை பணியால் அவதி
ராணிப்பேட்டையில் உள்ள வண்டிமேட்டுத்தெரு குறுகலாக உள்ளது. இதனை அகலப்படுத்தி விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி தெருவின் இருபுறமும் விரிவாக்கம் செய்வதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. எந்த வேகத்தில் பணிகள் தொடங்கப்பட்டதோ அதே வேகத்தில் பணி முடங்கி விட்ட்து. சாலையில் செல்பவர்கள் வேகமாக வாகனங்கள் வரும்போது அவசரத்தில் ஜல்லி கொட்டிய பகுதியில் ஒதுங்கி நடப்பதால் அவதிப்படுகின்றனர். எனவே முடங்கிய பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும்.
-டில்லிபாபு, ராணிப்பேட்டை.
அதேபோல் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வேலூர் எல்.ஐ.சி.காலனியில் பாதாள சாக்கடை திட்டம், மழைநீர் கால்வாய், சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக சுமார் 6 மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே போடப்பட்டிருந்த சாலை பொக்லைன் எந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டது. தற்போது மழைநீர் கால்வாய், பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்து, சாலையின் மேல் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை தார் ஊற்றி சாலை அமைக்கப்படவில்லை. எனவே எல்.ஐ.சி. காலனியில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
-திவாகர், எல்.ஐ.சி. காலனி, வேலூர்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கி தொடங்க வேண்டும்
திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி ஊராட்சியில் 1000 பேர் வசிக்கின்றனர். ஆனால் இங்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி இல்லை. இதனால் முதியோர் உதவித்தொகை, பென்சன், நூறுநாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் ஆகியவை பெற சிரமமாக உள்ளது. எனவே கடலாடியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி தொடங்கப்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், கடலாடி.
24 மணி நேரம் எரியும் தெருவிளக்கு
வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் சோடியம் மின் விளக்கு எரிந்து வருகிறது. பகலில் தேவையின்றி சோடியம் மின்விளக்கு எரிவதால் மின்சாரம் விரயமாவதோடு, மின் கட்டணம் செலுத்த மக்களின் வரிப்பணமும் விரயமாகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் இதனை கவனித்து அதிகாலையிலேயே சோடியம் மின்விளக்கு சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.
நசீர், வாணியம்பாடி.