ரொட்டி பால் ஊழியர்கள் சட்டசபை நோக்கி ஊர்வலம்
புதுவை சட்டசபை நோக்கி ஊர்வலம் நடத்திய ரொட்டி- பால் ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது
புதுவை சட்டசபை நோக்கி ஊர்வலம் நடத்திய ரொட்டி- பால் ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சட்டசபை நோக்கி ஊர்வலம்
புதுவை கல்வித்துறையில் பணிபுரியும் ரொட்டி-பால் ஊழியர்கள் தங்களை தினக்கூலி ஊழியராக மாற்றவேண்டும், அரசு அறிவித்தபடி குறைந்தபட்ச சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இன்று சட்டசபை நோக்கி ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி காலையிலேயே கல்வித்துறைஅலுவலகத்தில் கூடினார்கள். அங்கிருந்து ஊர்வலமாக சட்டசபை நோக்கி புறப்பட்டனர்.
தள்ளுமுள்ளு
ஊர்வலம் மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலையை அடைந்தது. அதற்கு மேல் அவர்களை செல்லவிடாமல் போலீசார் தடுப்பு கட்டைகளை அமைத்து தடுத்தனர். ஆனால் அதையும் மீறி செல்ல தடுப்பு கட்டைகளை அவர்கள் தள்ளினார்கள்.
ஆனால் அதை போலீசார் தடுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் சமரசம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பலத்த பாதுகாப்பு
அதன்பின் ரொட்டி-பால் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கேயே கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
ரொட்டி- பால் ஊழியர்களின் போராட்டத்தை தொடர்ந்து சட்டசபையை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போராட்டம் முடியும்வரை சட்டமன்ற ஊழியர்கள் தவிர பொதுமக்கள் யாரையும் போலீசார் சட்டசபை வளாகத்திற்குள் அனுமதிக்கவில்லை.