சிதம்பரம் அருகே நெல் அறுவடை எந்திர டிரைவர் மீது தாக்குதல் தந்தை-மகனுக்கு வலைவீச்சு
சிதம்பரம் அருகே நெல் அறுவடை எந்திர டிரைவரை தாக்கிய தந்தை, மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அருகே உள்ள தெற்கு சாலியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 45). தற்போது சிதம்பரம் விபிஷ்ணபுரம் ராஜகணபதி நகரில் வசித்து வரும் இவர், ராதாமூர் ராஜ் என்பவரிடம் நெல் அறுவடை எந்திரத்தின் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் வாடகை பணம் தொடர்பாக மோகன், ராஜ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அத்திபட்டு பகுதியை சேர்ந்த பாலு, அவரது மகன் நவீன் ஆகிய இருவரும் ராஜியிடம் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இதுபற்றி அறிந்த மோகன் நான் வேலை செய்த இடத்தில் நீங்கள் எப்படி வேலை செய்யலாம் என நவீனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
தாக்குதல்
நேற்று முன்தினம் இரவு வேளக்குடி பகுதியில் மோகன் மற்றும் பாலு, நவீன் ஆகியோருக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தந்தை, மகன் இருவரும் சேர்ந்து மோகனை கட்டையால் தாக்கி, கத்தியை கொண்டு வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த மோகன் அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டா க்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலு, நவீன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.