ஓசூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: கணவர் கண் முன்னே பெண் பரிதாப சாவு
ஓசூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கணவர் கண் முன்னே பெண் பரிதாபமாக இறந்தார்.
ஓசூர்:
கணவன்-மனைவி
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா கிட்டனஅள்ளியை சேர்ந்தவர் சின்னபையன் (வயது 55). பழைய இரும்பு பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி பொன்னுகாசி (41). கணவன்-மனைவி 2 பேரும் மோட்டார் சைக்கிளில், ராயக்கோட்டை சாலையில் ஓசூர் தேவி கருமாரியம்மன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு கணவன், மனைவி 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அப்போது சிறிது நேரத்தில் பொன்னுகாசி தனது கணவர் கண் முன்னே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சின்னபையனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சோகம்
விபத்து குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பலியான பொன்னுகாசி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.