‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-03-22 16:48 GMT
ரேஷன்கடை வசதி தேவை

ஆத்தூர் தாலுகா வக்கம்பட்டியை அடுத்த மைக்கேல்பட்டியில் ரேஷன்கடை இல்லை. சுமார் 1 கி.மீ. தூரம் நடந்து சென்று மக்கள் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதனால் கூலி வேலைக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர். எனவே மைக்கேல்பட்டியில் ரேஷன்கடை வசதி செய்து தரவேண்டும். -மணிமேகலை, மைக்கேல்பட்டி.

குளம் தூர்வாரப்படுமா? 

ஆண்டிப்பட்டி தாலுகா திம்மரசநாயக்கனூர் ஊராட்சி டி.பிள்ளைமுகம்பட்டியில் ஊரின் நடுவே உள்ள குளத்தில் கழிவுநீர் நிரம்பிவிட்டது. இந்த குளத்தில் மழைநீரை சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே குளத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவதோடு, குளத்தை தூர்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும். -சிரஸ்பாண்டி, டி.பிள்ளைமுகம்பட்டி.

ஏ.டி.எம். மையம் வேண்டும்

நத்தம் தாலுகா வி.எஸ்.கோட்டையில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆனால் இங்கு வங்கி ஏ.டி.எம். மையம், பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதனால் மக்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டியது இருக்கிறது. எனவே ஏ.டி.எம். உள்ளிட்ட வசதிகளை செய்து தரவேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -குமார், வி.எஸ்.கோட்டை.

சாலையோரத்தில் அபாய கிணறு 

திண்டுக்கல் வேடப்பட்டியில் இருந்து மருதாசிபுரம் செல்லும் சாலையோரத்தில் திறந்தவெளி கிணறு இருக்கிறது. இதனால் இரவில் வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது. அதை தடுக்க வேலி அமைக்க வேண்டும். -சுகுமார், வேடப்பட்டி.

குப்பைகளால் துர்நாற்றம்

தேனி சமதர்மபுரத்தில் வனச்சரக அலுவலகம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டி பின்னர் அள்ளி செல்கின்றனர். இதனால் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகள் கொட்டி அள்ளும் இடத்தை மாற்ற வேண்டும். -சவரிநாதன், தேனி.

சேதம் அடைந்த மின்கம்பம்

தாடிக்கொம்புவை அடுத்த ஆத்துப்பட்டியில் ஒரு மின்கம்பம் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்புகூடு போன்று காட்சி அளிக்கிறது. இதனால் பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே சேதம் அடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட வேண்டும். -சசிகுமார், ஆத்துப்பட்டி.

மேலும் செய்திகள்