ரேஷன் அரிசியை கடத்த முயன்ற டிரைவர் கைது
கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
உத்தமபாளையம்:
கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று கம்பம்மெட்டு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக காய்கறிகள், மளிகை பொருட்கள் ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று வந்தது. அந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்கள் மூட்டைகளுக்குள் மறைத்து வைத்து 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அரிசி மற்றும் மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மினி வேன் டிரைவரான கம்பத்தை சேர்ந்த பாண்டியனை (வயது 37) கைது செய்தனர்.