பல்துறை பணி விளக்க கண்காட்சி ஊட்டியில் 29 ந் தேதி நடக்கிறது

75-வது சுதந்திர தின விழாவையொட்டி ஊட்டியில் பல்துறை பணி விளக்க கண்காட்சி ஊட்டியில் வருகிற 29-ந் தேதி நடக்கிறது.

Update: 2022-03-22 16:08 GMT
ஊட்டி

75-வது சுதந்திர தின விழாவையொட்டி ஊட்டியில் பல்துறை பணி விளக்க கண்காட்சி ஊட்டியில் வருகிற 29-ந் தேதி நடக்கிறது

ஆலோசனை கூட்டம் 

நீலகிரி மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களை போற்றும் வகையிலும், சுதந்திர அமுத பெருவிழா மற்றும் பல்துறை பணி விளக்க கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் எஸ்.பி.அம்ரித் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 

75-வது சுதந்திர தின விழாவையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் சுதந்திர தினவிழா, பல்துறை பணி விளக்க கண்காட்சி வருகிற 29-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை ஊட்டி ஏ.டி.சி. திடலில் நடைபெற உள்ளது. 

இதில் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தேசத்தலைவர்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து அறிந்த மற்றும் அறியப்படாத வீரர்களின் புகைப்படங்கள் இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மாரத்தான் போட்டி

வனத்துறை, வருவாய்த்துறை ஊரக வளர்ச்சி முகமை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, சமூக நலத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் திட்டங் கள், நலத்திட்ட உதவிகள், இன்னுயிர் காப்போம் திட்டம், மக்களை தேடி மருத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


ஊட்டி நகராட்சி சார்பில் கண்காட்சி நடைபெறும் பகுதியில் பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். சுற்றுலாத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒருங்கிணைந்து 75-வது சுதந்திர தின விழாவையொட்டி மாரத்தான் போட்டி நடத்த வேண்டும்.

கலைநிகழ்ச்சிகள்

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு சுதந்திர போராட்ட வரலாறு குறித்து மாவட்ட அளவில் கட்டுரை, ஓவிய போட்டி நடத்த வேண்டும். கலை பண்பாட்டுத்துறை சார்பில் விழா நடைபெறும் 7 நாட்களும் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். 

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பது, சுற்றுச்சூழலை தூய்மையாக வைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாசரூதின், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சையத் முகம்மத் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்