பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது ஏன்?-காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கேள்வி

தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கிய நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது ஏன்? என மத்திய அரசுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2022-03-22 14:14 GMT
கோப்பு படம்
மும்பை, 
தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கிய நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது ஏன்? என மத்திய அரசுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
 பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இந்தியாவில் 5 மாநில தேர்தல் காரணமாக கடந்த 4½ மாதங்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. இந்தநிலையில் நேற்று நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 80 பைசாவும், கியாஸ் சிலிண்டர் ரூ.50-ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 
மும்பையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 0.84 பைசா உயர்ந்து ரூ.110.82-க்கு விற்பனை ஆனது. டீசல் 86 பைசா உயர்ந்து லிட்டர் ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
இதேபோல கியாஸ் சிலிண்டர் ரூ.899.50-ல் இருந்து ரூ.949.50 ஆக அதிகரித்து உள்ளது. ரஷியா-உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.
தேசியவாத காங்கிரஸ் கேள்வி
இந்தநிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து உள்ளது.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபாசே கூறுகையில், "ஒரு பக்கத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் மறுபுறம் மிகப்பெரிய தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை வாங்குகின்றனர். 
நீங்கள் (மத்திய அரசு) ஏற்கனவே மிகப்பெரிய தள்ளுபடி விலையில் லட்சக்கணக்கான கச்சா எண்ணெய் பேரல்களை ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்துவிட்ட நிலையில், இந்த நேரத்தில் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்த வேண்டிய தேவை என்ன?" என கேள்வி எழுப்பி உள்ளார்.
அட்டூழியங்கள் தொடக்கம்
இதேபோல மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் பொதுமக்கள் மீதான மத்திய அரசின் அட்டூழியங்கள் தொடங்கிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் இதுகுறித்து டுவிட்டரில், "தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பா.ஜனதா பொதுமக்களிடம் பாக்கியை வட்டியும், முதலுமாக வசூலிக்கும் என கூறியிருந்தேன். பெட்ரோல், டீசல், கியாஸ் பாக்கி வசூலிப்பு தொடங்கிவிட்டது" என கூறியுள்ளார்.
----------------

மேலும் செய்திகள்