அரசு போக்குவரத்துக் கழகம் ரூ1 கோடி வரிபாக்கி

அரசு போக்குவரத்துக் கழகம் ரூ1 கோடி வரிபாக்கி

Update: 2022-03-22 14:11 GMT
உடுமலையில் அரசு போக்குவரத்துக்கழகம், நகராட்சிக்கு கட்டவேண்டிய வரிநிலுவைத்தொகை பல ஆண்டுகளாக கட்டப்படாததால், குடிநீர் இணைப்பை துண்டிக்க சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ் டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 வரி நிலுவை
உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே பைபாஸ் சாலையில் தமிழ் நாடு அரசுபோக்குவரத்துக்கழகம் உள்ளது. இங்கு டிரைவர்கள், கண்டக்டர்கள், பணியாளர்கள் என550க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.இவர்களது சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு 6மாதத்திற்கு ஒருமுறை தொழில்வரி பிடித்தம் செய்து நகராட்சிக்கு செலுத்தவேண்டும். ஆனால் இவர்களுக்கு சம்பளம் பட்டியலிடும் தலைமை அலுவலகத்தில் இருந்து இவர்களது சம்பளத்தில் 6 மாதத்திற்கு ஒருமுறை பிடித்தம் செய்யப்பட்ட தொழில்வரி 2015ம் ஆண்டு முதல் நகராட்சிக்கு செலுத்தாமல்  ரூ.90லட்சம் நிலுவை உள்ளதாகக்கூறப்படுகிறது.இதில் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு ரூ.3லட்சம் மட்டும் கட்டப்பட்டதாகக்கூறப்படுகிறது.
மேலும் 2010ம் ஆண்டு முதல் சொத்து வரிகட்டாமல்  ரூ.18லட்சம் நிலுவை உள்ளதாகவும், கடந்த3ஆண்டுகளுக்கான குடிநீர் கட்டணமாக சுமார் ரூ.27ஆயிரம் நிலுவை உள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் வரியினங்களாக நகராட்சிக்கு கட்டவேண்டிய தொகைசுமார் ரூ.1கோடியே5லட்சம் நிலுவை உள்ளதாகக்கூறப்படுகிறது. இந்த வரிகளை நகராட்சிக்கு கட்டும்படி அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு உடுமலைநகராட்சி நிர்வாகம் பல முறை நோட்டீஸ் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம்
ஆனால் வரி நிலுவைத்தொகை வசூலாகாததால், அரசு போக்குவரத்துக்கழகத்திற்கான குடிநீர் குழாய் இணைப்பை துண்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நேற்று நகராட்சி ஆணையாளர் பி.சத்தியநாதன் உத்தரவின்பேரில் உடுமலை நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் எம்.சக்திவேல், கே.கலீல் ரஹ்மான் மற்றும் பணியாளர்கள் அரசுபோக்குவரத்துக்கழக அலுவலகத்திற்கு சென்றனர்.அங்கு அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு முன்பு, பை-பாஸ் சாலைப்பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பை துண்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த அரசு போக்குவரத்துக்கழக டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகியோர், எங்களது சம்பளத்தில் இருந்து தொழில்வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. நிலுவைத்தொகை குறித்து நிர்வாகத்திடம் கேளுங்கள். குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்தால் நாங்கள் குடிநீருக்கு என்ன செய்வது என்று கேட்டும், குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்க எதிர்ப்பு தெரிவித்தும் வாக்குவாதம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக உடுமலை கிளை மேலாளர் சந்திரன் அங்கு வந்து உயர் அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் பேசினார். இதைத்தொடர்ந்து குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை நடைபெறவில்லை.அத்துடன் நகராட்சி அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த வரியினங்களை கட்டுவதற்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்