சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
கயத்தாறு அருகே சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
கயத்தாறு:
கயத்தாறு அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிறுமி மாயம்
கயத்தாறு அருகே உள்ள செட்டிகுறிச்சி பஞ்சாயத்தை சேர்ந்த வடக்குகோனார் கோட்டை காலனி தெருவை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் வசந்த் (வயது 23). இவர் டிப்ளமோ மெக்கானிக் பொறியியல் படித்து சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடந்த 3 மாதங்களாக காதலித்து வந்தாராம். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோரும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தினர்.
வாலிபருடன் மீட்பு
இதில் மூர்த்தீஸ்வரம் கிராமத்தில் தங்கியிருந்த வசந்த்தையும், சிறுமியையும் போலீசார் பிடித்தனர். இருவரையும் கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை வசந்த் கடத்தி சென்றது தெரிய வந்தது.
போக்சோ சட்டத்தில் கைது
இதுகுறித்து கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாசீனிவாசன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வசந்தை கைது செய்து விசாரித்து வருகிறார். மீட்கப்பட்ட சிறுமியை போலீசார் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். பின்னர் சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.