பள்ளிபட்டு பஸ் நிலையத்தில் இரும்பு கடைக்குள் புகுந்த கார்

பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் இரும்பு கடைக்குள் புகுந்தது. 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

Update: 2022-03-22 13:46 GMT
கட்டுப்பாட்டை இழந்த கார்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் இரும்பு கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு நேற்று வார விடுமுறை என்பதால் பூட்டி கிடந்தது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கார்வேட்டி நகரம் மண்டலம் கே.வி.பி.ஆர். பேட்டை கிராமத்தை சேர்ந்த சிலர் குடிபோதையில் காரை ஓட்டி வந்தனர்.

இந்த கார் நேற்று மாலை பள்ளிப்பட்டு பஸ் நிலையத்திற்குள் வேகமாக நுழைந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பூட்டியிருந்த இரும்பு கடைக்குள் புகுந்து அங்கிருந்த சுவரில் மோதி நின்றது.

5 பேர் உயிர் தப்பினர்

இந்த விபத்தில் சுவர் இடிந்து விழுந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். கார் மோதியதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளிப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரை கைப்பற்றினார்கள். காரில் வந்தவர்களை பள்ளிப்பட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்