உத்திரமேரூர் அருகே 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய தேவி சிலை கண்டெடுப்பு

உத்திரமேரூர் அருகே 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய தேவி சிலை கண்டெடுக்கப்பட்டது.

Update: 2022-03-22 12:38 GMT
சிலை கண்டெடுப்பு

காஞ்சீபுரத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் உள்ளது ஆர்ப்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில் பிடாரி கோவில் செல்லும் வழியில் உள்ள காவாங்கரையில் தலைகள் மட்டுமே தெரிந்து எஞ்சிய பகுதி புதைந்த நிலையில் இருந்த ஒரு சிலையை ஊர் பொதுமக்கள் பத்திரமாக தோண்டி எடுத்து சுத்தம் செய்து வைத்திருந்தனர். அந்த சிலையை ஆய்வுசெய்த உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தலைவர் கொற்றவைஆதன் கூறியதாவது:-

இது பல்லவர் காலத்தை சேர்ந்த மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை ஆகும். 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த சிலையானது 4 அடி உயரத்தில் 3 அடி அகலத்தில் தனது மகன் மாந்தன் மற்றும் மகள் மாந்தியுடன் மூவரும் அமர்ந்த நிலையில் கரண்ட மகுடத்துடன் கண்ணை கவரும் வகையில் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆபரணங்கள் மற்றும் ஆடைகளுடன் காட்சி அளித்து கொண்டிருக்கிறார்கள்.

மூத்த தேவியின் வலப்பக்கம் மாட்டுத்தலை கொண்ட அவரது மகன் மாந்தன் கையில் ஆயுதத்துடனும் இடப்பக்கம் அவரது மகள் மாந்தியும் வீற்றிருக்கிறார்கள்.

மூத்த தேவி தலையின் வலப்பக்கம் தூய்மையின் அடையாளமான துடைப்பமும், வலப்பக்கம் அவரது சின்னமான காக்கை கொடியும் உள்ளது. மூத்த தேவியின் தலையில் கரண்ட மகுடமும் காதில் பத்ர குண்டலமும் கழுத்தில் சரப்பளி ஆபரணமும் தோள்களில் வாகுவளையங்களும் கைகளில் வளையல்களும் பருத்த வயிறோடு விரிந்த கால்களும் இடையில் இருந்து பாதம் வரை நீண்ட அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆடையோடு, புன்னகையான முகத்துடன் அழகிய புடைப்பு சிற்பமாக காட்சியளித்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் தொண்டை மண்டலமாக இருந்த காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகமான மூத்த தேவி சிலைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக இந்த சிலையில் மூத்த தேவியின் மகனும் மகளும் பெரிய உருவமாக அவருக்கு இணையாக காட்டப்பட்டிருப்பது சிறப்பானதாகும். மேலும் மூத்த தேவியின் இடக்கை தன்னுடைய மகள் மாந்தியின் இடையில் அணைத்த வண்ணம் உள்ளது கூடுதல் சிறப்பாகும்.

குல தெய்வமாக...

ஆர்ப்பாக்கம் கிராமம் என்பது சைவம், வைணவம், பவுத்தம், சமணம் போன்ற சமயங்கள் செழிப்புடன் வளர்ந்திருந்த ஊராகும். அந்த ஊரின் பழமையை பறைசாற்றும் வகையில் இந்த சிற்பம் அமைந்துள்ளது.

மூத்த தேவிக்கு தவ்வை, ஜேஷ்டாதேவி என பல பெயர்களுண்டு. இவர் திருமாலின் மனைவியான லட்சுமி தேவியின் மூத்த சகோதரி ஆவார். இவர் குறித்த தகவல் சங்க இலக்கியங்களில் மற்றும் திருவள்ளுவர், அவ்வையார் போன்ற பெரும் புலவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

பல்லவர் காலத்தில் வழிபாட்டின் உச்சத்தில் இருந்த இந்த தாய் தெய்வம் நந்திவர்ம பல்லவனின் குலதெய்வமாக இருந்துள்ளது. இதனால் பல்லவர்கால கோவில்களில் வீற்றிருப்பார்.

சில கோவில்களில் இவருக்கென்று தனி சன்னதியும் இருந்துள்ளது. பிற்கால சோழர் காலத்திலும் வழிபாட்டில் தொடர்ந்த இந்த தெய்வம் வளமையின் அடையாளமாக குழந்தைபேறு தருபவளாக செல்வவளம் பெருக்குபவளாக போற்றப்பட்டாள். நாளடைவில் மூத்த தேவி என்பது மருவி மூதேவியாக வழக்கில் வந்து வழிபாடு இல்லாமல் போய்விட்டது. இது பல்லவர்களின் இறுதி காலத்தை சார்ந்ததாகும்.

கடந்த கால வரலாற்றை

காஞ்சீபுரம் பல்லவர்களின் தலைநகரமாக அவர்களது ஆட்சியின் கீழ் இருந்த நகரமாகும் எனவே இந்த மாவட்டம் முழுவதும் பல்லவர்களின் வரலாற்று எச்சங்கள் இன்றும் பல இடங்களில் காணப்படுகிறது.

மண் மேட்டில், புதர் காட்டில் மற்றும் வயல்வெளியில் இதுபோன்ற வரலாற்று சின்னங்கள் புதைந்திருப்பதை பத்திரமாக சிதையாமல் மீட்டெடுத்து வழிபட்டு பாதுகாத்து வருவது கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமுதாயத்திற்கு எடுத்துசொல்லும் சிறந்த செயலாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்