இயற்கையின் படைப்பில் அற்புதங்கள் நிறைந்த மொத்த உருவமாய் திகழ்வதுடன் அரிய வகை உயிரினங்கள் தாவரங்களை தன்னகத்தே கொண்டதுடன் பருவநிலை மாற்றத்தை சமநிலைப்படுத்தி உலக இயக்கத்திற்கு பெரிதும் உறுதுணையாக விளங்கி வருகிறது காடுகள். காடுகளையும் அதனுள் வளர்ந்து வருகின்ற ஓரறிவு முதல் ஐந்தறிவு கொண்ட ஜீவன்கள் வரையில் பாதுகாத்து பராமரித்து வந்தால் சமவெளிப்பகுதியில் உள்ள அனைத்து உயிரினங்களும் சீரான பருவநிலையுடன் ஆரோக்கியமாக வாழலாம் என்பது நிதர்சனமான உண்மையாகும். அந்த வகையில் காடுகளின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ந் தேதி உலக காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது.
அதன்படி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் சார்பில் காடுகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேஷ்ராம் தலைமையில் ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. அதைத்தொடர்ந்து காடுகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. காடுகளின் மகத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வனத்துறை பணியாளர்கள், மாணவர்கள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இதில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக அலுவலர்கள் சிவக்குமார், சுரேஷ் உள்ளிட்ட வனவர், வனக்காப்பாளர்கள், வேட்டைதடுப்பு காவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.