இலஞ்சி குமாரர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
இலஞ்சி குமாரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
தென்காசி:
இலஞ்சி குமாரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இலஞ்சி குமாரர் கோவில்
குற்றாலம் அருகே பிரசித்தி பெற்ற இலஞ்சி குமாரர் கோவிலில் திருப்பணிகள் நடத்தப்பட்டு, கும்பாபிஷேக விழா கடந்த 16-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், பல்வேறு கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
விழாவின் சிகர நாளான நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் விக்னேசுவர பூஜை, 6-ம் கால யாகசாலை பூஜை, சிறப்பு பூஜைகள் நடந்தது.
கும்பாபிஷேகம்
காலை 9.45 மணியளவில் கோவில் விமானத்துக்கும், வள்ளி தேவசேனா சமேத திருவிலஞ்சி குமாரசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் சிறப்பு அபிஷேகம், திருக்கல்யாண உற்சவம், இரவில் சுவாமி வீதி உலா நடந்தது.
திரளான பக்தர்கள்
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் கோமதி, கோவில் நிர்வாக அலுவலர் சுசிலா ராணி, தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், தொழிலதிபர் டி.ராஜேந்திரன், தொழிலதிபரும் ஓணம் பீடி உரிமையாளருமான ஒய்.பாலகிருஷ்ணன்,
தி.மு.க. ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவி சின்னத்தாய் சண்முகநாதன், துணைத்தலைவர் முத்தையா, கவுன்சிலர்கள் காத்தவராயன், மயில்வேலன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.