கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது-வாய்த்தகராறில் தீர்த்துக்கட்டியது அம்பலம்
மங்களூரு அருகே கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். வாய்த்தகராறில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது
மங்களூரு: மங்களூரு அருகே கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். வாய்த்தகராறில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கட்டிட தொழிலாளி
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே முல்கி பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு ஆண் பிணம் ரத்தக்காயங்களுடன் கிடந்தது. இதுபற்றி அறிந்த முல்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த ஆண் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், கட்டுமான தொழிலாளி என்பதும், சக தொழிலாளியுடன் ஏற்பட்ட தகராறில் இவர் கொல்லப்பட்டதும் தெரியவந்தது.
மேலும் கொலை செய்யப்பட்டவர் கட்டீல் பகுதியில் வசித்து வந்த முண்டுகூரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான ஹரீஷ் சாலியான்(வயது 47) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலையாளியை கைது செய்யும் பணியில் தீவிரம் காட்டினர்.
தகராறு
அப்போது ஹரீசை கொன்றது தோக்கூர் பாப்பாநாடு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகன் பாப்பாநாடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். பின்னர் ஹரீசும், முருகனும் ஒரே இடத்தில் வேலை பார்த்தபோது நண்பர்களாக பழகினர். சம்பவத்தன்று கின்னிகோவில் பகுதிக்கு சென்ற 2 பேரும் அங்கு ஒரு மதுபான விடுதியில் மதுக்குடித்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மதுபான விடுதி ஊழியர்கள் அவர்கள் 2 பேரையும் அங்கிருந்து வெளியேற்றி உள்ளனர். பின்னர் அங்கிருந்து புனரூர் அருகே உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கு வைத்தும் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன், ஹரீசை சரமாரியாக தாக்கினார்.
கைது
இதில் நிலைகுலைந்த அவர் கீழே மயங்கி விழுந்தார். பின்னர் ஆத்திரம் தீராத முருகன், அருகில் கிடந்த கல்லை எடுத்து ஹரீசின் தலையில் போட்டு படுகொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.