பவானி திருவள்ளுவர் நகரில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு

பவானி திருவள்ளுவர் நகரில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-03-21 22:17 GMT
ஈரோடு
பவானி திருவள்ளுவர் நகரில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. 
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகள் குறித்த மனுக்களை வழங்கினார். மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் துரிதம் அடைந்து, சேவைகள் மக்களை விரைவாக அடைய வேண்டும். பல்வேறு காரணத்தால் அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். லஞ்சம் கொடுத்துத்தான் அரசு சேவையை பெறும் நிலை ஏற்படுகிறது. இதற்கு பல அரசியல் காரணமும் உள்ளது. நேர்மையாக செயல்பட விரும்பும் அரசு அலுவலர்கள் கூட நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இதனால் ரேஷன் கார்டு, குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் உள்ளிட்ட அடிப்படை அரசு சேவைகளில் தொடங்கி, தொழிற்சாலை செயல்பாடு, உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதி என எந்த பணியும் குறித்த காலத்துக்குள் நிகழவில்லை.
பஸ்களில் இலவச பயணம்
விரைவான, தரமான அரசு சேவைகளை பெற வழி வகுக்கும், சேவை பெறும் உரிமை சட்டத்தை, தமிழகத்தில் கொண்டு வர வேண்டும். அரசு நிர்வாகத்தில் மக்களுக்கு வழங்க வேண்டிய அரசு சேவைகளுக்கு கால நிர்ணயம் செய்து, மக்கள் சாசனம் வரையறுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்தி, மக்களுக்கு விரைவான சேவையை வழங்க வேண்டும். மீறும் அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
இந்து தேசிய கட்சி மாவட்ட தலைவர் குமாரசாமி கொடுத்திருந்த மனுவில், ‘தமிழக அரசு பெண்களுக்கு நகர பஸ்களில் இலவச பயணத்தை அனுமதித்துள்ளது. இதுபோல் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஆண்களுக்கும் பஸ்களில் இலவச பயணத்துக்கு அனுமதிக்க வேண்டும். மேலும் பெண்கள் அனைத்து அரசு பஸ்களிலும் தமிழகம் முழுவதும் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
டாஸ்மாக் கடை
பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
பவானியில் இருந்து அந்தியூர் செல்லும் பிரதான ரோட்டில் உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் சுமார் 1,500 வீடுகள் உள்ளன. இங்கிருந்து சுமார் 500 மாணவ -மாணவிகள் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூட மாணவர் விடுதி, மாணவிகள் விடுதியில் இருந்து 100 அடி தொலைவில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையினால் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். மதுபோதையில் சிலர் காலி பாட்டில்களை குடியிருப்பு பகுதிகளிலும், மாணவிகள் விடுதி வளாகத்திலும் வீசி செல்கின்றனர். இதனால் இரவு நேரத்தில் பெண்கள், மாணவிகள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு பவானி-அந்தியூர் செல்லும் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
தடுப்பணை
கொடுமுடி அருகே உள்ள தேவம்பாளையம் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை போராட்டத்தை கைவிட்டு, மனு கொடுத்துவிட்டு செல்லுமாறு கூறினர். அதன் பேரில் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
தேவம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் 200 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறோம். குடியிருப்பை ஒட்டி மேற்குபுறத்தில் குரங்கன் ஓடை செல்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுக்கும்போது ஓடை பெருகி குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது. இதனிடையே இந்த ஓடையின் குறுக்கே காலனி அருகில் தடுப்பணை கட்ட திட்டமிட்டு அதிகாரிகள் ஓடையை அளவீடு செய்துள்ளனர். இங்கு தடுப்பணை கட்டினால் மழை காலங்களில் ஓடையில் இருந்து தண்ணீர் வெளியேறி குடியிருப்புகளில் புகுந்துவிட வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இங்கு தடுப்பணை கட்டும் முடிவை கைவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
242 மனுக்கள் 
இதேபோல் மொத்தம் 242 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், வெள்ளித்திருப்பூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரனுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணையினையும், ரூ.9 ஆயிரத்து 50 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளையும் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ராஜகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி கோதைச்செல்வி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி ரங்கநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்