கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து 3 தொழிலாளிகள் பலி

காபு தாலுகாவில், பழைய இரும்பு கடையில் 2 கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் 3 தொழிலாளிகள் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர்

Update: 2022-03-21 22:09 GMT
மங்களூரு:
காபு தாலுகாவில், பழைய இரும்பு கடையில் 2 கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் 3 தொழிலாளிகள் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர். 

பயங்கர சத்தத்துடன்...

உடுப்பி மாவட்டம் காபு தாலுகா பகீரனகட்டேயில் பழைய இரும்பு கடை ஒன்று உள்ளது. நேற்று இந்த கடையில் தொழிலாளிகள் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் இரும்பு கடையில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதனால் கடை முழுவதும் தீ பற்றி எரிய தொடங்கியது. 

‘தீ’ கடையில் இருந்த பழைய பொருட்கள் மீதும் பிடித்து மளமளவென எரிந்தது. கடையில் இருந்து புகை கிளம்பியது. அருகில் இருந்தவர்கள் காபு போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் கடையில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி அணைத்தனர். 

திடீர் மின்கசிவு

மேலும், தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுத்தனர். எனினும் கடையில் இருந்த பழைய பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் அந்த கடையில் இருந்த 3 பேர் பலியாகினர். மேலும், 2 பேர் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினர். இதற்கிடையே அங்கு வந்த காபு போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ேமலும், காயம் அடைந்த 3 பேரை மற்றொரு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அனுப்பினர். 

இதுகுறித்து காபு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தீ விபத்தில் இறந்தவர்கள் சந்திரா நகரை சேர்ந்த ரஜாப் மற்றும் மல்லாரு பகுதியை சேர்ந்த ரசாக், நியாஸ் என்பதும், கடையில் ஏற்பட்ட திடீர் மின்கசிவால் 2 கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. மேலும், விபத்தில் ஹசனப்பா மற்றும் பகீம் பெலபு ஆகிய 2 பேர் காயமடைந்தார்கள் என போலீசார் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்