100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்கா இடிப்பு இஸ்லாமிய பெண் மயங்கி விழுந்தார்

தஞ்சை வடவாற்றில் புதிய பாலங்கள் கட்டும் பணி நடைபெறுவதால் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தர்கா இடிக்கப்பட்டதை பார்த்து இஸ்லாமிய பெண் மயங்கி விழுந்தார். வீர ஆஞ்சநேயர் கோவில் மண்டபமும் இடிக்கப்பட்டது.

Update: 2022-03-21 20:21 GMT
தஞ்சாவூர்:
தஞ்சை வடவாற்றில் புதிய பாலங்கள் கட்டும் பணி நடைபெறுவதால் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தர்கா இடிக்கப்பட்டதை பார்த்து இஸ்லாமிய பெண் மயங்கி விழுந்தார். வீர ஆஞ்சநேயர் கோவில் மண்டபமும் இடிக்கப்பட்டது.
பாலங்கள் கட்டும் பணி
தஞ்சை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தஞ்சை காந்திஜிசாலையில் கல்லணைக்கால்வாய் குறுக்கே இருந்த இர்வீன்பாலம் இடிக்கப்பட்டு, புதிதாக 2 பாலங்கள் தலா ரூ.1½ கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
அதேபோல் கரந்தை வடவாறு பாலத்தின் குறுக்கே இருந்த பழமையான பாலம் இடிக்கப்பட்டு, புதிதாக 2 பாலங்கள் தலா ரூ.1½ கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. வடவாறு பாலம் கட்டும் பணி நடைபெறும் இடத்தின் அருகே பழமைவாய்ந்த தர்கா இருந்தது. இந்த தர்கா 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. அதற்கு எதிரே வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
தர்கா இடிப்பு
இந்த கோவிலும் பழமைவாய்ந்தது. தர்கா மற்றும் வீர ஆஞ்சநேயர் கோவிலை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நேற்று கரந்தை வடவாற்றின் குறுக்கே புதிய பாலங்கள் கட்டும் பணியை பார்வையிட்டார். பின்னர் புதிய பாலங்கள் கட்டுவதற்காக தர்கா, வீர ஆஞ்சநேயர் கோவில் மண்டபம் ஆகியவற்றை இடிக்கும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன் மேற்பார்வையில் பொக்லின் எந்திரம் மூலம் தர்கா முழுமையாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த தர்காவை பராமரித்து வந்த குடும்பத்தினர் தர்காவை ஒட்டி தகரம் மற்றும் குடிசையால் ஆன வீட்டில் வசித்து வந்தனர். அந்த வீட்டையும் இடிக்க போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொருட்களை எடுத்து செல்ல கொஞ்சம் காலஅவகாசம் அளிக்க வேண்டும் என அந்த குடும்பத்தினர் வலியுறுத்தினர். ஆனால் தர்காவை இடித்த கையோடு வீடும் இடிக்கப்பட்டது.
மயங்கி விழுந்த இஸ்லாமிய பெண்
ஏற்கனவே அந்த குடும்பத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் தர்கா இடிக்கப்படுவதை பார்த்து கதறி அழுதனர். அவர்களை அருகில் வசித்து வந்த பெண்கள் ஆறுதல் படுத்தினர். இந்தநிலையில் மகப்பூபீ என்ற வயதான இஸ்லாமிய பெண், தர்கா மற்றும் வீடு இடிக்கப்படுவதை பார்த்து மயங்கி தரையில் விழுந்தார். இதனால் பரபரப்பு நிலவியது. உடனே அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் அந்த பெண்ணின் முகற்றில் தண்ணீரை தெளித்து மயக்கத்தை தெளியவைத்தனர். பின்னர் நிழலுக்கு அழைத்து சென்று அவரை அமர வைத்தனர். ஆனால் அந்த குடும்பத்தினர் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தனர்.
இதேபோல் வீர ஆஞ்சநேயர் கோவில் முகப்பு மண்டபம் இடிக்கப்பட்டது. வீர ஆஞ்சநேயர் சாமி இருந்த கருவறை பகுதி பாலம் கட்டும் பகுதியை கடந்து இருப்பதால் அவற்றை அதிகாரிகள் இடிக்கவில்லை. அதே பகுதியில் இருந்த இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை மற்றும் மற்றொரு கட்டிடத்தின் முகப்பு பகுதியும் இடிக்கப்பட்டது.
வாடகை வீட்டில் வசிக்க நடவடிக்கை
இது குறித்து மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கூறும்போது, தர்காவை ஒட்டி வசித்து வந்தவர்களுக்கு தற்காலிகமாக வாடகை வீட்டில் வசிக்க மாநகராட்சி மூலம் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சொந்தமான இடம் தர்காவுக்கு எதிரே இருக்கிறது. அந்த இடத்தில் அவர்கள் தங்குவதற்கு கட்டிடமும், தர்காவை தொடர்ந்து நடத்த வசதியும் செய்து கொடுக்கப்படும். வீட்டை இடிக்கும் போது பொருட்கள் சேதம் ஏற்பட்டிருந்தால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதைத்தொடர்ந்து கரந்தை கோழிக்காரத்தெருவில் இருந்து பாலோப்பநந்தவனம் சித்தர்மடம் பகுதியின் வழியாக மக்கள் வந்து செல்வதற்கு வசதியாக வடவாற்றின்குறுக்கே மண்சாலை போடப்பட்டு வருகிறது. இந்த பணியை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல் கரந்தையில் இருந்து குளத்துமேட்டுத்தெரு, அம்மாதோட்டம், கொடிக்காலூர் இணைப்புசாலை வழியாக கீழவாசல் குறிச்சி தெருவுக்கு வரக்கூடிய சாலையையும் பார்வையிட்டார். இந்த சாலையில் புதிதாக தார்சாலை போடப்பட்டால் மக்கள் எளிதாக தஞ்சை மாநகருக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்