மாற்றுத்திறனாளிகள் கைது

சென்னை கோட்டையில் குடியேற திருச்சியில் இருந்து புறப்பட்ட மாற்றுத்திறனாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-21 19:55 GMT
திருச்சி
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ரூ.1000-த்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தக்கோரியும், கடும் ஊனத்திற்கு வழங்கப்படும் ரூ.1,500-ஐ ரூ.5 ஆயிரமாக உயர்த்தக்கோரியும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தப்பட்டது.
அடுத்த கட்டமாக சென்னை கோட்டையில் செவ்வாய்க்கிழமை குடியேறும் போராட்டம் நடத்த திருச்சி மாநகர் மாவட்டத்தில் இருந்து 460 மாற்றுத்திறனாளிகள் ரெயில் மற்றும் பஸ்களில் செல்வதற்கு முன்பதிவு செய்திருந்தனர்.
மாற்றுத்திறனாளிகள் கைது
அதன்படி திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று இரவு 10.30 மணிக்கு புறப்படும் அரசு பஸ்சில் 65 மாற்றத்திறனாளிகள் செல்ல ஒன்று கூடினர். இந்தநிலையில் சென்னை செல்ல அனுமதி இல்லை என்று போலீஸ் உதவி கமிஷனர்கள் அஜய்தங்கம், காமராஜ் தலைமையிலான போலீசார் கூறியதுடன் தடையை மீறி செல்ல முயன்றால், கைது செய்யப்படுவீர்கள் என தெரிவித்தனர்.
போலீசாரின் இத்தகைய நடவடிக்கையை கண்டித்து மத்திய பஸ் நிலையத்தில் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ஆரோக்கியராஜ், மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபால் உள்ளிட்டவர்கள் தரையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு எதிராகவும், கோரிக்கையை வலியுறுத்தியும் கோஷமிட்டனர். அதைத்தொடர்ந்து 33 பெண்கள் உள்ளிட்ட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெயில் நிலையம்
இதேபோல திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை செல்ல தயாரான மாற்றுத்திறனாளிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்