தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-03-21 19:02 GMT
அரியலூர்
அடிப்படை வசதி செய்து தரப்படுமா? 
பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் எல்லைக்குட்பட்ட நெடுவாசல் சாலையில் உள்ள ஒரு பள்ளிக்கு வடபுறத்தில் உள்ள பார்க்கவன் நகரில் சுமார் 25 வீடுகள் உள்ளன.  இங்கு தெரு விளக்குகள் மற்றும் சாலை வசதிகள் என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பாலகுமார்,  பார்க்கவன்நகர், பெரம்பலூர். 

குண்டும், குழியுமான சாலை 
கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், இனுங்கூர் ஊராட்சி, காகம்பட்டியில் இருந்து நந்தவன பள்ளம் செல்லும் தார் சாலை பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது அந்த வழியாக ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், இனுங்கூர், கரூர்.

தார்ச்சாலை அமைக்க வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே உள்ள பாண்டி பத்திரத்திலிருந்து பிராந்தனி செல்லும் சாலை பாதி தூரம் மண் சாலையாகவும், பாதி தூரம் மெட்டல் சாலையாகவும் உள்ளது. இந்த சாலையில்  மெட்டல் எல்லாம் பெயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பாண்டிபத்திரம், புதுக்கோட்டை. 

சர்வீஸ் சாலையை ஆக்கிரமிக்கும் செடிகள்
திருச்சி-பழைய பால்பண்ணை சர்வீஸ் சாலையில் இடதுபுறம் சாலை ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து சிக்னல் வரை சுமார் 200 மீட்டர் சாலையின் ஓரம் பள்ளங்களாக இருக்கிறது. மேலும் செடி, கொடிகள் போன்றவை அதிகமாக வளர்ந்து அங்கே வைத்துள்ள வழிகாட்டி பலகைகளை மறைத்து வருகின்றன. இந்த சர்வீஸ் சாலையில் ஒரு குறுகிய பாலம் உள்ளது. அந்த பாலத்தை விரிவு படுத்தினால் போக்குவரத்து மிகவும் எளிதாகும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சரவணன், பழைய பால்பண்ணை, திருச்சி. 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
கரூர் மேட்டுத்தெருவில் உள்ள ஒரு நர்சரி பள்ளி எதிரில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதில் வீட்டு உபயோக கழிவு பொருட்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்பட பல்வேறு கழிவு பொருட்கள் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  இந்த குப்பைகளை அகற்றிவிட்டு இந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்படாமல் இருக்க வழிவகை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மேட்டுத்தெரு, கரூர். 

கட்டண விளக்க பதாகை வைக்கப்படுமா? 
திருச்சி ரெயில்வே ஜங்சன் வாகன நிறுத்துமிடத்தில் கட்டணங்கள் எந்த அடிப்படையில் நாள் ஒன்றுக்கு எவ்வளவு என்பது தெளிவாக விளக்கக்கூடிய  கட்டண பதாகை  வைக்கப்படவில்லை. இதனால் கட்டணம் எவ்வளவு வசூலிக்கபடுகிறது என்பதில் வாகன ஓட்டிகள் குழப்பத்திற்கு ஆளாகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன நிறுத்த கட்டணம் எவ்வளவு என பதாகை வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருச்சி. 

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, பிச்சாண்டார் கோவில் அருகே உள்ள மாருதி நகர்  குடியிருப்பு பகுதியில் உள்ள சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுவதுடன், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மாருதி நகர், திருச்சி. 

குரங்குகளால் தொல்லை 
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, பிச்சாண்டார் கோவில் அருகே உள்ள  மாருதி நகரில்  ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை வீடுகளில் வைக்கப்பட்டுள்ள திண்பண்டங்கள், மளிகை பொருட்கள், பழவகைகளை எடுத்துச்சென்று விடுகின்றன. மேலும் இப்பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளை கடிக்க வருவதுபோல் அச்சுறுத்துகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பிச்சாண்டார்கோவில், திருச்சி. 


மேலும் செய்திகள்