ஊக்க ஊதியம் வழங்கக்கோரி 7 ஆயிரம் தபால் அட்டைகள்
பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கக்கோரி 7 ஆயிரம் தபால் அட்டைகளை முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கக்கோரி 7 ஆயிரம் தபால் அட்டைகளை முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஊக்க ஊதிய உயர்வு
பள்ளி ஆசிரியர் பணிக்கான அடிப்படை கல்வித் தகுதியை விட கூடுதலாக கல்வி பயின்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியம் கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது. இந்த ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆயிரத்து 400 ஆசிரியர்கள் தமிழக முதல்-அமைச்சர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர், தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் ஆகியோருக்கு தபால் அட்டை அனுப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
7 ஆயிரம் தபால் அட்டை
ஒவ்வொரு ஆசிரியரும் தலா 5 தபால் அட்டை வீதி 7 ஆயிரம் தபால் அட்டைகளை தபால் அலுவலகங்கள் மூலம் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் பாலசண்முகம் கூறியதாவது:-
பள்ளி மாணவர்களின் கற்பித்தலுக்கும், பொதுமக்களுக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாமல் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக தபால் அட்டை மூலம் எங்களது கோரிக்கையை முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்
மாநில முழுவதும் உள்ள அஞ்சலங்களில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி கோரிக்கை மனுக்கள் தபால் அட்டையில் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டுக்கு வருவாயை ஏற்படுத்தி உள்ளோம். எனவே எங்களது கோரிக்கையை அரசு கவனத்தில் கொண்டு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.