பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றார்.
5 பவுன் சங்கிலி பறிப்பு
மயிலாடுதுறை சேந்தங்குடி வள்ளலார் கோவில் ஒத்த தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் மனைவி கவுரி (வயது 57). இவர் நேற்று முன்தினம் மாலை 3.30 மணியளவில் வள்ளலார் கோவில் அருகில் உள்ள பூக்கடை ஒன்றில் மாலை வாங்கிக்கொண்டு ஒத்ததெருவில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் திடீரென கவுரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கவுரி சத்தம் போட்டுள்ளார்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுரியிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.