நடையனூரில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு
கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நடையனூரில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
கரூர்,
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 270 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை விரிவாக கேட்டறிந்த கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மக்களின் கோரிக்கைகள் குறித்து அதிகபட்சமாக ஒருவார காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ள மனுக்கள் மீது எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க இயலுமோ அவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். முன்னதாக கூட்டத்தில் மனு கொடுத்த உடன் நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர், பிரேமா என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.2 ஆயிரத்து 780 மதிப்பில் காதொலி கருவியும், துரைராஜ் என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.9 ஆயிரத்து 50 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிளையும் வழங்கினார்.
செல்போன் கோபுரம்
கரூர் மாவட்டம், நடையனூர், இளங்கோ நகரை சேர்ந்த ஊர் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். ஊரில் வசிப்பவர்கள் விவசாயத்தை நம்பியே குடும்பம் நடத்தி வருகின்றோம். தற்போது ஊரில் மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு மத்தியில் செல்போன் கோபுரம் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கதிர்வீச்சினால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கதிர்வீச்சினால் விவசாய நிலத்திற்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே செல்போன் கோபுரம் அமைக்க தடை விதிக்க கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அடிப்படை வசதி
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், மருதூர் கிராமம் தெற்கு 2, சுப்பன் ஆசாரிகளம் (விஸ்வநாதபுரம்), ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 200 ஆண்டு காலமாக 5 தலைமுறையாக எந்தவித அடிப்படை வசதியுமின்றி, சாலை வசதி இல்லாமல் கரடுமுரடான சேறும், சகதியும் நிறைந்த பாதையில் பயணித்து வருகிறோம். எனவே சாலைவசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- லஞ்ச ஊழலை கட்டுப்படுத்தி பொதுமக்கள் அரசு சேவைகளை விரைவாக பெற்றிட வழிவகுக்கும் சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.