இரவில் பனிப்பொழிவு பகலில் 101 டிகிரி வெயில்
விழுப்புரத்தில் இரவில் பனிப்பொழிவும், பகலில் 101 டிகிரி வெயிலும் கொளுத்தியது. அனல் காற்றும் வீசியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. இன்னும் கோடைகாலத்தில் அதன் தாக்கம் எப்படி இருக்குமோ என இப்போதே நினைக்க வைக்கிறது. தமிழகத்தில் கடந்த வாரத்தில் சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது.
விழுப்புரம் மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் அளவு 97 டிகிரி முதல் 99 டிகிரி வரையில் பதிவாகி இருந்தது. அதே சமயம் இரவில் பனிப்பொழிவின் தாக்கமும் அதிகமாக உள்ளது.
101 டிகிரி வெயில்
விழுப்புரத்தில் நேற்று முன்தினம் இரவு பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. பங்குனி மாதம் பிறந்த பிறகும் நேற்று காலை 8 மணி வரை பனி மூட்டமாக இருந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றதை காணமுடிந்தது.
நேற்று பகல் 10 மணிக்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் 2 மணி வரை வெயில் சுட்டெரித்தது. அதாவது வெயிலின் அளவு 101 டிகிரியாக பதிவானது.
அனல் காற்று வீசியது
சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். மேலும் பொதுமக்கள் குடைபிடித்தபடியும், துணியை தலை மற்றும் முகத்தில் கட்டியபடி சென்றதையும் காணமுடிந்தது.
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் இரவில் பனிப்பொழிவாலும், பகலில் வெயில் சுட்டெரித்ததாலும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.