என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை
திண்டிவனம் அருகே என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
மயிலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகன் சதீஷ்(வயது 23). என்ஜினீயரிங் படித்துள்ள இவர், திண்டிவனம் பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 3 மாத திறமை வளர்ச்சி சார்ந்த பயிற்சி பயின்று வந்தார்.
இவர் கடந்த 11-ந் தேதி சொந்த ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் நேற்று மாலை என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதிக்கு வந்தார். இவருடன் சங்கராபுரம் அடுத்த எடுத்தனூரை சேர்ந்த ஏழுமலை மகன் சிவகுமார்(23), கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈஸ்வரகண்ட நல்லூரை சேர்ந்த வெற்றிவேல் மகன் சவுந்தரராஜன்(21) ஆகியோரும் தங்கினர்.
தற்கொலை
இந்த நிலையில் இன்று காலை சதீஷ், வயிறு வலிப்பதாக சக நண்பர்களிடம் கூறி பயிற்சி வகுப்பிற்கு செல்லவில்லை. இதற்கிடையில் மதிய இடைவேளையில் சிவகுமார், சவுந்தரராஜன் ஆகியோர் விடுதி அறைக்கு வந்தனர். அப்போது அங்கு சதீஷ் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் மயிலம் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.