ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை கண்டறிந்து விரைவில் சிகிச்சை
ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை கண்டறிந்து விரைவில் சிகிச்சை அளிக்கப்படும் எனகலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
கரூர்,
ஊட்டச்சத்து குறைபாடு
தாந்தோணி ஊராட்சியில் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் பிறந்த குழந்தை முதல் 6 வயதிற்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை கண்டறிவும் வகையில் அவர்களுக்கு உடல் எடை மற்றும் உயரத்தை கண்டறியும் முகாமினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கரூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை கண்டறியும் வகையில், உடல் எடை மற்றும் உயரத்தை அளவிடும் முகாம் மற்றும் குழந்தைகளுக்கு என்னென்ன சத்தான உணவுகளை வழங்கிட வேண்டும் என்பது குறித்து துறை வல்லுனர்கள் பெற்றோர்களுக்கு விளக்கக்கூடிய நிகழ்வு நடத்தப்படுகின்றது.
குழந்தைகளுக்கு சத்தான உணவு
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுப்பதோடு, சுகாதாரத்தையும் பேணி காக்க வேண்டும். குழந்தைகள் விளையாடக்கூடிய இடங்களில் தரைகள், சுவர்கள் உள்ளிட்ட இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுகாதாரமாக இல்லாத காரணத்தால் குழந்தைகளுக்கு சளி, வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் அதிக அளவில் ஏற்படும். குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் இருப்பதை தவிர்க்க 6 மாதத்திற்கு ஒரு முறை மருந்து கொடுக்க வேண்டும். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த மருந்து வழங்கப்படும். குழந்தைகளுக்குஊட்டச்சத்து சரியாக கிடைக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கண்காட்சி
குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட தொந்தரவுகள் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற வேண்டும். கிராமப்புறங்களில் நாட்டு வைத்தியம் என்ற பெயரில் சிலர் வழங்கும் மருத்துவங்களை நம்ப வேண்டாம். அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள். நமது கரூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக குழந்தைகள் வளர்ச்சி துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்துக்கள் குறித்த கண்காட்சியினை கலெக்டர் பார்வையிட்டார்.